தமிழகத்தில் 20 ஆயிரம் ஏ.டி.எம்.கள் முடங்கும்!

தமிழகத்தில் 20 ஆயிரம் ஏ.டி.எம்.கள் முடங்கும்!


சென்னை: செப்.23-2019


வரும் 26, 27 தேதிகளில் வங்கிகள் வேலை நிறுத்தம் செய்வதால், தமிழகத்தில் 20 ஆயிரம் ஏ.டி.எம். மையங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்தியாவை ரூ.350 இலட்சம் கோடி மதிப்புள்ள பொருளாதார நாடாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் தற்போது நிலவும் பொருளாதார மந்தநிலை மத்திய அரசின் இலக்குக்குச் சற்றுப் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதம் அளவுக்கு வீழ்ச்சியடைந்து விட்டது.


பொருளாதார நெருக்கடி நிலையைச் சமாளிக்க, மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 30-ஆம் தேதி பத்துப் பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி நான்கு பெரிய வங்கிகளுடன் ஆறு சிறிய வங்கிகள் இணைக்கப்பட உள்ளன.


இந்த இணைப்பால் நாட்டில் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆகக் குறைகிறது. இந்த நடவடிக்கையால் பொதுத்துறை வங்கிகள், உலகத் தரத்துக்கு வலிமை பெறும், நிர்வாகச் செலவு கணிசமாகக் குறையும், இதன் தொடர்ச்சியாக, பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.


வங்கிகள் இணைப்புக்கு அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில், “வங்கிகள் இணைப்பால் நிறையப் பேர் வேலையை இழக்கும் ஆபத்து ஏற்படும். நாளடைவில் இது தனியார் மயத்துக்கு வழிவகுத்து விடும்” என்று தெரிவித்தனர்.


வங்கிகள் இணைப்பைக் கைவிட வேண்டும் என்றும் வங்கி ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தின. ஆனால் மத்திய அரசு இந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.


முதல் கட்டமாக வருகிற 25-ஆம் தேதி நள்ளிரவு முதல் 27-ஆம் தேதி நள்ளிரவு வரை வேலை நிறுத்தம் செய்யப் போவதாக, வங்கி அதிகாரிகள் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது. எனவே வருகிற 26, 27 தேதிகளில் வங்கிப் பணிகள் அனைத்தும் முடங்கும். வங்கிகள் திறக்கப்பட்டாலும் எந்த ஊழியரும் பணியில் ஈடுபட மாட்டார்கள்.


 அதற்குப் பிறகும் மத்திய அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ளா விட்டால் நவம்பர் மாதம் 2-ஆம் வாரத்தில் இருந்து கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், முதல் கட்ட போராட்டத்தை வெற்றிகரமாக மாற்றும் முயற்சிகளில் அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.


வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்தம் செய்வதால் பணப் பரிமாற்றங்களில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். குறிப்பாக ஏ.டி.எம். சேவை வறண்டு விடும் நிலை உருவாகும். இது ஏ.டி.எம். சேவையை மட்டுமே நம்பி இருக்கும் பொதுமக்களுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.


ஏ.டி.எம். எந்திரங்களில் வங்கி அதிகாரிகளின் மேற்பார்வையில் தான் பணம் நிரப்பப்படும். 26, 27- ஆம் தேதிகளில் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் செய்வதால் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் சேவைக்கு ஒத்துழைக்க மாட்டார்கள். 25- ஆம் தேதி மாலையில் இருந்தே வங்கி அதிகாரிகள், ஏ.டி.எம். பணிகளைப் புறக்கணிப்பார்கள் என்று கூறப்படுகிறது.


எனவே, 25 ஆம் தேதி புதன் கிழமை ஏ.டி.எம். எந்திரங்களில் வைக்கப்படும் பணத்தை வைத்துத் தான் வியாழன், வெள்ளி ஆகிய 2  நாட்களின் தேவையைச் சமாளிக்க வேண்டியிருக்கும். ஆனால் ஏ.டி.எம். எந்திரங்களில் அதிகளவு மக்கள் பணம் எடுக்கும் நிலையில் வியாழக்கிழமையே ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு விடும்.


இதனால் ஏ.டி.எம். சேவை முடங்கும் ஆபத்து உள்ளது. அந்த வகையில் நாடு முழுவதும் 2 இலட்சத்து 12 ஆயிரம் ஏ.டி.எம்.களில் பணமிருக்காது. எனவே, இது நாடு முழுவதும் சுமார் ரூ.48 ஆயிரம் கோடி பணப் பரிமாற்றம் பாதிக்கும். இவ்வகையில் தமிழ்நாட்டில் சுமார் 20 ஆயிரம் ஏ.டி.எம். சேவை முடங்கும் என்று தெரிய வந்துள்ளது.


சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் நான்கு நாட்களுக்குத் தொடர்ச்சியாக வங்கிப் பணிகளும், ஏ.டி.எம். சேவைகளும் முடங்கும்.