கர்நாடகத்தில் நடக்கும் 15 தொகுதிகளிலும் போட்டி!
தேவகௌடா தகவல்
பெங்களூரு:செப்.22-2019
கர்நாடகத்தில், அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் 15 தொகுதிகளிலும் ம.ஜ.த. போட்டியிடும் என அக்கட்சித் தலைவர் தேவகவுடா கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் குமாரசாமி முதல்வராக இருந்த போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 15 ச.ம.உ.க்கள் பதவி விலகினர். இதனால், குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. காலியாக உள்ள இந்த 15 தொகுதிகளுக்கும் அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மதசார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவகவுடா, இடைத்தேர்தல் நடக்கும் 15 தொகுதிகளிலும் ம.ஜ.த. போட்டியிடும் என ஏற்கெனவே கூட்டணி அரசுக்குத் தலைமை வகித்த குமாரசாமி அறிவித்துள்ளார். காங்கிரஸ் ஆதரவில் நடந்த ஆட்சியின் போது அவர் சந்தித்த பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுத்துள்ளார் எனக் கூறினார்.
மைசூரில் நடந்த ம.ஜ.த. கூட்டத்தில், குமாரசாமி பேசுகையில், இடைத்தேர்தல் நடக்க உள்ள அனைத்துத் தொகுதிகளிலும், வேட்பாளர்களைக் களம் இறக்கும் பணியை, தேவகவுடா ஏற்கெனவே தொடங்கி விட்டார். இடைத்தேர்தல் நடக்கும் 15 இடங்களில் 8 முதல் 10 இடங்களில் கட்சியின் வெற்றியைக் குறிவைத்துள்ளேன். என்று கூறினார்.