ஒருநாள் மழைநீர் 21 நாட்களுக்குக் குடிநீர்!
சென்னை: செப்.22-2019
சென்னையில் பெய்த ஒருநாள் மழையால் ஏரிகள் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் சென்னைக்கு 21 நாட்களுக்குத் தேவையான தண்ணீர் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னையில் கடந்த 18ஆம் தேதி இரவு முழுவதும் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழையால் சென்னை நகருக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், பூண்டி ஆகிய ஏரிகளில் இருந்து சென்னைக்குக் குடிநீர் வழங்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இந்த ஏரிகள் நீரின்றி வறண்டு கிடந்தன.
இந்த நிலையில், கடந்த 18 ஆம் தேதி புழல் ஏரிப் பகுதியில் 9 செ.மீ. மழையும், சோழவரம் ஏரியில் 13 செ.மீ. மழையும், செம்பரம்பாக்கம் ஏரியில் 3 செ.மீ. மழையும், பூண்டி ஏரியில் 20 செ.மீ. மழையும் பதிவானது. சென்னையில் 10 செ.மீட்டர் மழை பெய்தது.
வறண்டு கிடந்த ஏரிகளுக்கு இந்த மழையால் நீர்வரத் தொடங்கியுள்ளது. இந்த நீர் சென்னை மக்களின் குடிநீர்ச் சிக்கலைச் சமாளிக்கவும் கை கொடுத்துள்ளது.
இதுதொடர்பாகச் சென்னைக் குடிநீர் வாரிய அதிகாரிகள், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடிய விடிய பெய்த மழையால் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஒரே நாள் பெய்த மழையால் 21 நாட்களுக்குச் சென்னை மக்களுக்குத் தேவையான தண்ணீர் கிடைத்துள்ளது. 20.09.2019 நிலவரப்படி, பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 2,242 கன அடி நீரும், சோழவரம் ஏரிக்கு 347 கன அடி நீரும், புழல் ஏரிக்கு 315 கன அடி நீரும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 93 கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது என்றனர்.