பாதுகாப்பு வளையத்துக்குள் வரும் மாமல்லபுரம்!
காஞ்சிபுரம்: செப்.22-2019
இந்தியப் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் மாமல்லபுரத்துக்கு வரவிருப்பதால், இங்கே செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தலைமைச் செயலாளர் சண்முகமும், காவல்துறைத் தலைவர் திரிபாதியும் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
வரும் அக்டோபர் 11-ஆம் தேதி சீன அதிபர் ஜின் பிங்கை, பிரதமர் நரேந்திர மோடி மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசுகிறார். இரண்டு நாட்கள் இந்த இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் தங்கிப் பேச்சு நடத்தவுள்ளனர்.
சீன வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத் துறையைச் சேர்ந்த 50 அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் தமிழக போலீசாருடன் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர். சீன அதிபர் பார்வையிட உள்ள வெண்ணெய் உருண்டைக் கல், அர்ச்சுனன் தபசு, கடற்கரைக் கோயில், ஐந்து ரதம் ஆகிய இடங்களை, சீனப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து புகைப்படம் எடுத்துள்ளனர். இவர்களுடன் சீன அதிபரின் தலைமைப் பாதுகாவலர், தனிச் செயலாளர், மாமல்லபுரம் சரக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பலர் வந்திருந்தனர்.
இந்நிலையில், தமிழகத் தலைமைச் செயலாளர் சண்முகமும், காவல்துறைத் தலைவர் திரிபாதியும் இன்று காலை மாமல்லபுரம் சென்று ஆய்வு செய்தனர். தமிழக உளவுத்துறை அதிகாரி தேன்மொழி, மாவட்ட ஆட்சியர் பொன்னையா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உள்ளிட்ட உயரதிகாரிகளும் உடன் சென்றனர்.
அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கலங்கரை விளக்கம், கடற்கரைக் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் பாதுகாப்புக்கு இடையூறாக இருக்கும் கடைகளை அகற்ற அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.