தங்கச்சிறகு முளைத்துப் பறந்து விடுவேனா? - ப.சிதம்பரம்


தங்கச்சிறகு முளைத்துப் பறந்து விடுவேனா? - ப.சிதம்பரம்


புதுடில்லி:செப்.24-2019


ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் ரூ.305 கோடி அளவில் மோசடி செய்ததாக சி.பிஐ.யால் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.


இம்மாதம் 5 ஆம் தேதி கைது செய்யப்பட்ட சிதம்பரம் 17 நாட்களாகத் திகார் சிறையில் இருந்து வந்தாலும், சிதம்பரத்தின் டுவிட்டர் பக்கம் தொடர்ந்து செயல்பாட்டில் இருந்து வருகிறது. சிதம்பரம் சார்பில் அவரது குடும்பத்தினர் கருத்துகளைப் பதிவிடுவதாகக் குறிப்பிட்டு, தொடர்ந்து கருத்துகள் பதிவிடப்பட்டும், கேள்வி கேட்பவர்களுக்குப் பதில்கள் அளிக்கப்பட்டும் வருகிறது.


இதில் நேற்று பதிவிட்ட டுவீட்டில், எனக்குத் தங்கச் சிறகுகள் முளைத்து, நான் நிலவுக்குப் பறந்து சென்று விடுவதாகச் சிலர் கருதுவது ஆச்சரியமாக உள்ளது. நான் பத்திரமாகத் தரையிறங்குவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.


சிதம்பரத்தின் அறையில் இருந்து தலையணை, நாற்காலி நீக்கப்பட்டு விட்டதால் அவருக்கு முதுகுவலி ஏற்பட்டுள்ளதாகக் கூறி ஜாமின் வழங்கும்படி அவரது வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார். அதனை நிராகரித்த நீதிமன்றம், சிதம்பரத்தின் காவலை அக்டோபர் 3ஆம் தேதி வரை நீட்டித்தது. தனக்கு ஜாமின் மறுக்கப்பட்டதன் காரணமாகவே சிதம்பரம் இப்படி டுவீட் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.


இதற்கு முன் அவரது பிறந்தநாளான செப்டம்பர் 16 அன்று பதிவிட்ட டுவீட்டில், நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றித் தான் தனது கவலையும், சிந்தனைகளும் உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் திகார் சிறையில் இருக்கும் சிதம்பரத்தை, சோனியாவும், மன்மோகன் சிங்கும் சந்தித்தனர். அவர்களுடன் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் தந்தையைச் சந்தித்தார்.


பின் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், சோனியாவும் மன்மோகன் சிங்கும் எனது தந்தையைப் பார்த்து, தங்களின் ஆதரவைத் தெரிவித்தது எனது தந்தைக்கும், எனது குடும்பத்திற்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எங்களின் அரசியல் போராட்டத்துக்குக் கிடைத்த ஊக்கம் இது என்றார்.


ஹூஸ்டனில் நடந்த ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 'எல்லாம் சவுக்கியம்' என உரையைத் தொடங்கினார். இதைக் கிண்டல் செய்து சிதம்பரம் பதிவிட்டுள்ள டுவீட்டில், "நீண்ட நாட்களுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி வலிமையாகவும், துணிவுடனும் உள்ளது. நானும் வலிமையாகவும், துணிவுடனும் இருப்பேன். வேலை வாய்ப்பின்மை, வேலையிழப்பு, குறைந்த சம்பளம், வன்முறைத் தாக்குதல், காஷ்மீரில் ஊரடங்கு, எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டது தவிர நாட்டில் அனைத்தும் நன்றாக உள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.